பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டுக்கான காரீப் பருவ பயிர்களை காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு தமிழக வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டம் 2016-2017ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து இதுநாள்வரை, 40 லட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு, 8 ஆயிரத்து 155 கோடியே 33 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், குறுவை நெல் சாகுபடி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பயிரை காப்பீடு செய்வதற்கு ஜுலை 31ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதர மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு மாவட்ட வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிப்படைந்தால், பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும் என்பதால், உரிய காலத்திற்குள் காப்பீடு செய்து பயனடையுமாறு வேளாண்துறை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.