திண்டுக்கல் அருகே, 5 கோடி ரூபாய் செலவில், பல்லுயிர் பூங்கா அமைக்க அரசு அறிவித்துள்ளதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிறுமலை அமைந்துள்ளது. ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தில் உள்ள சிறுமலைக்கு செல்ல 18 கொண்டை ஊசி வளவுகள் உள்ளன. இது வளமான பல்லுயிர் வகை காட்டை சேர்ந்தது. இங்கு, மா, பலா, வாழை, காபி மட்டுமின்றி காய்கறிகளும் அதிகளவு பயிரிடப்படுகிறது. அதே போன்று, அரிய வகை மூலிகைகளும் விளைகின்றன. அதே சமயம், இவற்றை பலரும் திருடி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமலையில் தாவரங்கள், விலங்கினங்கள் அழிவதை தடுப்பதற்காகவும், சுற்றுலா பயணிகளை கவர்வதற்காகவும் 5 கோடியில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இந்த பூங்காவில் அரிய வகை தாவரங்கள், மரங்கள், பூக்கள், விலங்கினங்கள் அமைக்கப்பட உள்ளன. இது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.