கருப்பு பட்டியல் கம்பெனிக்கு டெண்டரா? – தமிழக அரசின் முடிவால் ரூ.200 கோடி இழப்பு ?

கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கு கொரோனா மளிகை தொகுப்புக்கான டெண்டரை தமிழக அரசு வழங்க உள்ளதாக வெளியான தகவல் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

 

கொரோனா நிவாரணமாக 13 விதமான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பொருட்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் டெண்டர் கோரியுள்ளது. டெண்டரை எடுக்க சென்னையை சேர்ந்த அருணாச்சலா இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கும் முடிவை தமிழக அரசு கடந்த 19ஆம் தேதியே இறுதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளா அரசால் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக வெளியாகும் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கேரளாவில் அம்மாநில அரசால் வழங்கப்பட்ட ஓணம் பரிசு தொகுப்புக்கான டெண்டரை அருணாச்சலா இன்பெக்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. தரமற்ற பொருட்கள் வழங்கிய புகாரைத் தொடர்ந்து, இந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 2 கோடியே 11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மளிகைத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு மளிகைத் தொகுப்புக்கான அடக்க விலை 326 ரூபாயாக மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு 419 ரூபாய்க்கு இறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

Exit mobile version