நாமக்கல் மாவட்டம், சோழசிராமணி கிராம தென்னை விவசாயிகள், கூட்டுப் பண்ணை நிறுவனத்தின் மூலம் நீரா பானம் தயாரித்து விற்பதால், அதிக லாபம் ஈட்டுகின்றனர். தமிழக அரசின் வழிகாட்டுதலால், விவசாயிகள் முதலாளிகளாக மாறியது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு……….
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, விவசாயிகளை முதலாளிகளாக்கும் முத்தான திட்டம் ஒன்றை அறிவித்தார். அதை இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். அதன்படி, ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள ஆயிரம் விவசாயிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களைத் தனித் தனி குழுக்களாக அமைத்து, உழவர் உற்பத்தியாளர் கூட்டுப் பண்ணை நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவை தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை, இந்தக் கூட்டுப் பண்ணை நிறுவனங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்து, அதன் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் பெற வழி செய்கின்றன.
தமிழக அரசு சார்பில் கிராமங்கள்தோறும் அமைக்கப்படும் விவசாயக் குழுக்களில் 20 விவசாயிகள் இடம்பெறுகின்றனர். அப்படி அமைக்கப்பட்ட 50 குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, உழவர் உற்பத்தியாளர் கூட்டுப்பண்ணை நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் இணைவதற்கு விவசாயி ஒவ்வொருவரும், ஆயிரம் ரூபாய் பங்குத் தொகை செலுத்தி தங்களைப் பங்குதாரராக இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்நிறுவன விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, அவற்றைச் சந்தைப்படுத்தி, வருவாயாக விவசாயிகளுக்கு கிடைக்கும்வரை, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் மற்றும் மானிய உதவிகளை அரசாங்கம் வழங்குகிறது. இந்த முறையில், நாமக்கல் மாவட்டம், சோழசிராமணி பகுதி தென்னை விவசாயிகள் நீரா பானம் தயாரித்து, சிறப்பான முறையில் லாபம் ஈட்டுகின்றனர். காவிரி ஆற்று பாசனத்தை நம்பி உள்ள இந்தப் பகுதியைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் ஆயிரம் பேர் இணைந்து, குழுக்களாக ஒருங்கிணைந்து, உழவர் உற்பத்தியாளர் கூட்டுப்பண்ணைய நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். அதன் மூலம், தென்னை நீரா பானம் தயாரித்து அவர்களே விற்பனை செய்கின்றனர்.
சோழசிராமணி பகுதியில் உள்ள 750 தென்னை மரங்களில் இருந்து, சுழற்சி முறையில் தினசரி நீரா பானம் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் 6 மாதங்கள் நீரா பானம் தயாரிக்கவும், அடுத்த 6 மாதம் தேங்காய் காய்ப்பிற்காகவும் தென்னை மரங்கள் விடப்படுகின்றன. இப்படி சுழற்சி முறையில் விடுவதன் மூலம், ஒரு தென்னை மரத்தில் இருந்து 6 மாதத்தில் 9 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் வருமானம் பெற முடிகிறது.
20 தென்னை மரம் வைத்திருக்கும் ஒரு விவசாயி, நீரா பானம் உற்பத்தி செய்து, விற்பனை செய்வதன் மூலம் 6 மாதத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடிகிறது. அதுமட்டுமின்றி, தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு இதன் மூலம் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பும், வருமானமும் கிடைக்கிறது. மேலும், தாய்ப்பாலுக்கு நிகரான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நீரா பானத்திற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 100 சதவிகிதம் இயற்கையாக தயாரிக்கப்படும் நீரா பானத்தில் வைட்டமின்கள் ஏ,பி மற்றம் சி ஆகியவை அதிகளவு உள்ளதாகவும், தாய்ப்பாலில் உள்ள உயிர் சத்தான குளோரிக் அமிலம், கால்சியம் ஆகியவையும் அதிகளவு நீரா பானத்தில் இருப்பதாகவும் தெரியவருவதால் பொதுமக்கள் அதை விரும்பி வாங்கி அருந்துகின்றனர். மேலும், மருத்துவக் குணத்திற்காகவும் பலர் அதை விரும்பி வாங்கி அருந்துகின்றனர்.
உழவில் மட்டும் உழன்று கொண்டிருந்த விவசாயிகளை, அவர்கள் விளைவித்த பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய வழி ஏற்படுத்திக் கொடுத்ததன மூலம், நல்ல லாபம் ஈட்டும் முதலாளிகளாக உருவாக்கி உள்ள தமிழக அரசுக்கு அவர்கள் ஒரே குரலில் நன்றி தெரிவிக்கின்றனர்.