டெண்டரில் முறைகேடு நடந்ததாக அதில் பங்கேற்ற நிறுவனங்கள் ஏதும் நீதிமன்றத்தை நாடாத நிலையில், அதற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத நபர்களால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது…
சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி, அறப்போர் இயக்கம், திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது… வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைத்து, விசாரணை குறித்த அறிக்கையை 2 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சட்ட விதிகளை பின்பற்றியே டெண்டர் ஒதுக்கீடு நடைபெற்று வருவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், ஒவ்வொரு டெண்டர்களும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அரசு பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது உள்நோக்கத்தோடும், பொய்யாகவும் புகார்கள் கொடுப்பதற்கான வாய்ப்புள்ளதால் முதற்கட்ட விசாரணை முடிந்து அதில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதை அடுத்து, வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 7 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.