தமிழகத்தில் 2016ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால், இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் உள்ள நீர் ஆதாரங்களை சிக்கனமாகப் பயன்படுத்தி இந்த வறட்சியை எதிர்கொள்ளவும், மழைநீரை சேமித்து, புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி, நீர்வள ஆதார மேலாண்மையை மேம்படுத்தவும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குடிமராமத்து திட்டத்தை அறிமுகம் செய்தார்.
குடிமராமத்துத் திட்டம் என்பது அரசின் உதவியுடன் பொதுமக்கள் தாங்களே தங்கள் பகுதியின் நீர்நிலைகளை தூர்வாரி மேம்படுத்துவது ஆகும். இத்திட்டத்தின் மூலம் நீர் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்களில் இருக்கும் புதர்களை அகற்றுதல், ஏரிக்கரைகளைப் பராமரித்தல், வாய்க்கால்கள், கால்வாய்களில் கொள்ளளவுக்கு அதிகமாகப் படிந்துள்ள மண்ணை அகற்றுதல், மேடு பள்ளங்களைச் சமன் செய்தல், மதகுகள், அடைப்பான்கள், மிகை நீர் கலிங்குகள் மற்றும் குறுக்குக் கட்டுமான அமைப்புகளைச் சீரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
இப்படியாக நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் வளம் மிக்க வண்டல் மண்ணானது விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டு, அது விளைச்சலை அதிகரிக்க உதவும். இப்படியாக நீர்நிலைகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் குடிமராமத்து என்ற ஒரே திட்டம் வரப்பிரசாதமாக அமைந்தது. தமிழக முதல்வரின் குடிமராமத்துத் திட்டத்தினால் அதற்கு முன்பு 84 ஆண்டுகளாக தூர்வாரவேபடாமல் இருந்த மேட்டூர் அணையில் கூட துர்வாரப்பட்டு வண்டல் மண் எடுக்கப்பட்டு வரலாறு படைக்கப்பட்டது.
குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் அதன் முதல் ஆண்டிலேயே தமிழகத்தின் 30 மாவட்டங்களில் 1,159 பணிகள் 100 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார். இத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் 2018ல் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மேலும் 1,511 நீர் நிலைகள் 328 கோடி நிதியில் குடிமராமத்து செய்யப்பட்டன.
இவ்வாறாகக் கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 428 கோடி ரூபாய் மதிப்பில் தமிழகமெங்கும் 30 மாவட்டங்களில் குடிமராமத்துப் பணிகள் வெற்றிகரமாக நடந்துள்ளன. இதனால் இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு மழையை எதிர் கொள்ளத் தயாராக உள்ளன.
கல்வெட்டுகளின்படி கரிகாலச் சோழன் காலத்தில் தமிழகத்தில் காணப்பட்ட குடிமராமத்துத் திட்டத்தை தமிழக முதல்வர் மீண்டும் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளார். குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தினால் தங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மக்கள் தெரிந்து கொள்வார்களோ என்று திமுகவினர் அச்சப்பட்டதையும், அதனால் இத்திட்டத்தை அவர்கள் செயல்படுத்தத் துணியவில்லை என்பதையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளவும் குடிமராமத்துத் திட்டத்தின் வெற்றி காரணமாக உள்ளது. அடுத்து வரும் ஒவ்வொரு மழைக் காலத்திலும் குடிமராமத்துத் திட்டத்தின் வெற்றி தமிழகத்தின் 30 மாவட்டங்களிலும் எதிரொலிக்கும்.