தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று வேகமெடுத்து வரும் நிலையில், தினசரி கொரோனா தொற்று பாதிப்பும் அதிகரித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், சென்னையில் மட்டும் புதிதாக 682 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 168 பேருக்கும், கோவையில் 75 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை உள்ளதால், அனைத்து மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை தயார்படுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவையான அளவு தனிமைப்படுத்தும் மையங்களை ஏற்படுத்தவும், தேவைப்பட்டால், டி.ஆர்.டி.ஓ உதவியுடன் தற்காலிக சிகிச்சை மையங்களை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில், வீட்டு தனிமையில் இருப்போரை கண்காணிக்க சிறப்பு குழு ஏற்படுத்தலாம் என்றும், மாவட்ட அளவிலான கொரோனா கட்டுப்பாட்டு மையங்களை திறக்கவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
Discussion about this post