சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவோம் ஆனால் சினிமா இல்லாமல் இருக்க முடியாதென்று சொல்பவர்கள் தமிழர்கள். அப்படிப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்த கொரோனா பாதிப்பு நேரத்தில் தமிழ்த்திரையுலகம் செய்தது என்ன? அதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம். திரையில் காணும் ஹீரோக்களை நிஜ ஹீரோக்களாக மக்கள் கொண்டாட இயற்கை அவ்வப்போது வாய்ப்புகளை வழங்கும். அப்படி ஒரு வாய்ப்பாகத்தான் இந்த கொரோனா தாக்குதல் அமைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் வேளையில் அந்தந்த மாநில பிரபலங்கள் தங்களால் இயன்ற நிவாரண நிதியை அரசுக்கு வழங்கி வருகின்றனர். பாலிவுட் நடிகர் அக்சய்குமார் 25 கோடி வழங்கியுள்ள நிலையில், விக்கி கௌஷால் மற்றும் கார்த்திக் ஆர்யன் தலா ஒரு கோடியும், பாடகி லதா மங்கேஷ்கர் 25 லட்சமும் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா ஷர்மா உள்ளிட்டோரும் உதவ முன்வந்துள்ளனர்.
அதேபோல் நமக்கு பக்கத்து வீடாக உள்ள தெலுங்கு திரையுலகில், அதிகபட்சமாக பிரபாஸ் நான்கு கோடி வழங்கியுள்ளார். பவன் கல்யாண் இரண்டு கோடியும், அல்லு அர்ஜுன் 1 கோடியே 25 லட்சமும், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பாலகிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு கோடியும் கொடுத்துள்ளனர். இன்னும் பல பிரபலங்கள் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையளித்து வருகின்றனர். இதை தமிழ் நடிகர்களுடன் ஒப்பிட்டால் நிலைமை தலைகீழாக இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்சமும், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதிஷ் இரண்டு லட்சமும் வழங்கியுள்ளனர்.
திரைப்படப் படப்பிடிப்பை நம்பி அன்றாடம் வாழ்க்கை நடத்தும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு நடிகர்கள் உதவ வேண்டுமென ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டதன் பேரில் நடிகர் ரஜினிகாந்த் ஐம்பது லட்சமும், சிவகுமார் குடும்பத்தினர் பத்து லட்சமும் விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் தலா பத்து லட்சமும் திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளனர். அதேபோல் திரைத்துறை ஊழியர்களுக்கு ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சமும், நடிகர் பிரகாஷ்ராஜ் 25 கிலோ எடையுள்ள 150 அரிசி மூட்டைகளையும் வழங்கியுள்ளனர். ஆனால் அத்தியாவசியப் பொருட்கள்கூட வாங்க முடியாமல் தவிக்கும் கூலித்தொழிலாளர்களுக்கு எந்த நிதியும் வழங்கவில்லை. அதில் பெரும்பான்மையானவர்கள் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் தான். ஒவ்வொரு முறை அவர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போதும் கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்து கொண்டாடுபவர்கள்தான்.
“ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழல்லவா” என்று பாடி நடித்த ரஜினியும், “ஆளப்போறான் தமிழனென்று” முறுக்கேற்றிய விஜய்யும், “இந்த மக்களுக்கு நான் எதாவது நல்லது செய்யவேண்டும்” என்று துடியாய்த் துடித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மனுத்தாக்கல் செய்த விஷாலும் ஏன் கொரோனா நிவாரண விஷயத்தில் மௌனம் சாதிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. கொரோனாவின் கொடூரத்தில் சிக்கித் தவிக்கும் ஏழை மக்களுக்கு கோடிகளில் புரளும் தமிழ் நடிகர்கள் உதவ வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.