கனவுகள் + கற்பனைகள் + காகிதங்கள் = மீரா

கனவுகள்+கற்பனைகள்+காகிதங்கள்=மீரா

கவிஞர் மீராவின் நினைவு நாள்

கனவுகள், கற்பனைகள், காகிதங்கள் என்றால் மீரா அதற்குள் வாழ்ந்துகொண்டிருப்பார் அல்லது நம்மை மீட்டுக்கொண்டிருப்பார்.

புதுக்கவிதை பரிமாணத்தில் கவிஞர் மீராவின் கவிதைகளை தாண்டாமல் நம்மால் கவிதை உலகத்திற்குள் பயணிக்க முடியாதபடி, மகாகவி பாரதியாருக்கு பிறகான புதுக்கவிதை என்ற கவிதைத் தூணை இருகப் பற்றிப்பிடித்தவர் கவிஞர் மீரா.

1938 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் சிவகங்கை சீமையில் பிறந்த மீராவின் இயற்பெயர் மீ.ராஜேந்திரன்.

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் பேராசிரியராக பணி செய்த மீரா, கல்லூரிப்பணி, சமூகப்பணி, ஆசிரியர் இயக்க பணி இவைகளுடன் இலக்கிய பணியையும் மிகவும் விரும்பி செய்தார்.

மூன்றும் ஆறும், கோடையும் வசந்தமும், ஊசிகள், கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள், குக்கூ, வா இந்தப் பக்கம், மீரா கட்டுரைகள், பாரதியம், சுயம்வரம் உள்ளிட்ட நூல்கள் மீராவின் படைப்புகளாகும்.

முக்கியமாக ஊசிகள், கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் ஆகிய கவிதை நூல்கள் இலக்கிய வெளியில் மட்டுமல்ல, பொதுவெளியிலும் பேசப்பட்டது.

ஜப்பானிய இலக்கிய உலகில் ஹைக்கூவின் தந்தை என்று கொண்டாடப்படும் பாஸோவை போல், தமிழ் இலக்கியத்தினுள்,

“அழுக்கைத்தின்னும்
மீனைத்தின்னும்
கொக்கைத் தின்னும்
மனிதனைத்தின்னும்
பசி! “

போன்ற குக்கூ என்ற புதிய கவிதை விதியை தமிழுக்கு சொல்லிக் கொடுத்தவர்தான் கவிஞர் மீரா.

எழுத்தாளர்களின் வேடந்தாங்களாய் இருந்த மீராவின் கவிதைகளால், அரசியல்வாதிகளுக்கு நடுக்கம் கொடுக்காமல் இருந்ததில்லை.

“தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கில்லை,
தெருவோரச் சாக்கடைக்கு வருமா தெப்பம்? “ உள்ளிட்ட கவிதைகள் எல்லாம் பேரறிஞர் அண்ணா முதல் அனைவரின் பால் ஈர்த்த கவிதை வரிகளாகும்.

 

“பிறந்ததுதான் பிறந்தேன் நான் பெண்ணாய்ப் பிறந்தேனா” என்ற பாடிச் சென்ற மீரா 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாள் உடல் நலக்குறைவால் காலமானார்.

மீராவை எப்படி திருப்பிப் போட்டாலும் ஒரு நாணயத்தில் விழும் பூவாகவே இருப்பார், அவர் கவிதைகளை எப்படி திருப்பி படித்தாலும் புரட்சிப் பூவாகவே மலரும், மலர்கிறது….

நியூஸ் ஜெ செய்திகளுக்காக செய்திக்குழுவுடன் ஜாபர் சாதிக்…

Exit mobile version