உவமைக் கவிஞர் என்று உலகம் வியந்த சுரதாவின், 100 வது பிறந்த நாள் இன்று… தமிழுக்கு தொண்டு செய்த செழுங்கவிதைத் தகையாளரை வியந்து வணங்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு…
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை பாரதியாரால் மறுமலர்ச்சி பெற்றது. பாரதியின் வாரீசாக பாரதிதாசன் உயர்ந்தார். அவரால், பாரதி கவிதா மண்டலம் என்று ஒரு கவிப் பரம்பரையே உருவானது. அதில், பாரதிதாசனுக்கு ஒரு தாசனாய்க் கவிதை வாள் சுழற்றிய கம்பீரக் கவிஞர் சுரதா.
நாகையை அடுத்த பழையனூரில், இன்றிலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன், இயற்றமிழ் அன்னை இன்பம் எய்தப் பிறந்தவர் ராஜகோபாலன். இளமையிலேயே பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட அவர், பாரதிதாசனுக்கு உதவியாளராக திகழ்ந்தார். மெல்ல மெல்ல தமக்குள் உள்ள கவிதை ஊற்றைக் கண்டுகொண்டு, சுப்புரத்தின தாசனாக உயர்ந்தார். அதன் சுருக்க வடிவமே சுரதா ஆகும்.
கவிதை, தனது அடுத்த பரிமாணமான சினிமாவுக்குள் நுழைந்த காலம் அது. அதன் முன்னோடிகளில் ஒருவரான சுரதா, சில திரைப்படங்களுக்குப் பாடல்களும், கதை வசனங்களும் எழுதியுள்ளார். உவமைக் கவிஞர் என்று இலக்கிய உலகினரால் அழைக்கப்பெறும் சுரதா, தட்டிவிட்டால் கொட்டிவிடும் கவித்துவத்துக்குச் சொந்தக்காரராக வாழ்ந்தார்.
தமிழ்நாட்டில், கவியரங்கங்களை விழாக்கோலங்களாக மாற்றியதில் பெரும் பங்கு சுரதாவுக்கு உண்டு. நடுக்கடலில் கவியரங்கம், வானத்தில் விமானக் கவியரங்கம் என்று புதுமைகளின் ஊற்றாக திகழ்ந்தார் சுரதா.
பாரதியாரின் கவிதைப் பரம்பரையில் வந்தாலும், தமக்கெனத் தனி நடையை, புதிய உத்தியை உருவாக்கியவர் சுரதா.
விண்ணுக்கு மேலாடை வெயில்விழுங்கும் மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
மண்ணுக்கு மேலாடை மயில்நில இருட்டு
மனத்திற்கு மேலாடை வளர்கின்ற நினைவு
கண்ணுக்கு மேலாடை தேங்குகின்ற தூக்கம்
எண்ணுக்கு மேலாடை எதுவென்றால் எழுத்தாம்
எழுத்துக்கு மேலாடை எண்ணங்கள் ஒன்றே
என்பது உள்ளிட்ட முத்துக் கவிதைகளை முகிழ்த்த, தனித்தமிழ் கவிக்கடல் சுரதாவின் 100 வது பிறந்தநாளில், அவர்தம் நினைவை வணங்கி நெகிழ்கிறது நியூஸ் ஜெ தொலைக்காட்சி…
-செய்திக் குழுவுடன் விவேக்பாரதி