தமிழ்நாட்டின் மின்னணுவியல் துறையின் உற்பத்தியை, 2025ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பை 25 சதவீதமாக உயர்த்துதல், 2025க்குள் தமிழ்நாட்டின் மின்னணுவியல் துறையின் உற்பத்தியை, 100 பில்லியன் டாலராக உயர்த்துவது, 2024ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் மின்னணு வன்பொருள் உற்பத்தி துறையின் மனிதவள தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, ஒரு லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுள்ளன. கைப்பேசிகள், எல்.இ.டி தயாரிப்புகள், Fabless சிப் வடிவமைப்புகள், Solar photovoltaic செல்கள் ஆகியவற்றை கணிசமாக அதிகரித்தல், இதற்கான ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க சூழலை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறையில் முதலீடு செய்ய முனைவோருக்கு முதலீட்டு தொகையில் 30 சதவீதம் வரை மூலதன மானியம் வழங்கப்படும் என்றும், 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் காலக்கடன்களுக்கு அதிகபட்சமாக 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படும் என்றும், முதன்முறையாக பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு 6 மாத காலங்களுக்கு மாதம் நான்காயிரம் ரூபாய் வீதம், பயிற்சி மானியம் வழங்கப்படும் என்றும், பெண் ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீதம் பயிற்சி மானியம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.