நாட்டிற்கே முன்னுதாரணமாக பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்களை அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதால், மத்திய அரசின் விருதை பெற்றுள்ளதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் குறித்து மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தார். விமான நிலையத்துடன் முடிவடையும் மெட்ரோ ரயில் பாதையை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் அமைக்கப்படவுள்ள புறநகர் பேருந்து நிலையம் வரை நீட்டிக்க ஆய்வுகள் நடைபெற்று வருவதாக அப்போது தெரிவித்தார். மேலும், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்களை அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதால்தான், மத்திய அரசின் விருதை பெற்றுள்ளதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், தனது அழைப்பை ஏற்று சென்னை வந்து பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தமைக்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சரின் அழைப்பை ஏற்று தமிழகம் வந்து நலத்திட்டங்களை துவக்கி வைத்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி போன்ற உண்மையான தலைவரை காண்பது மிகவும் அரிது என்றும் பெருமையாக குறிப்பிட்டார்.
2016ஆம் ஆண்டில் அதிமுக அரசு தொடர தமிழ்நாட்டு மக்கள் அளித்த ஆதரவு, மீண்டும் தொடரும் என உறுதியாக நம்புவதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.