18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக ஒரு கோடியே 50 லட்சம் கோவிட் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இது தொடர்பான செய்தி குறிப்பில்,இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தற்போது 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 55 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகிற மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தவாறு இலவசமாக தடுப்பூசி செலுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கென, முதற்கட்டமாக ஒரு கோடியே 50 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் 3 கோடியே 50 லட்சம் பேர் உள்ள நிலையில் கோவிஷீல்டு ஒரு கோடியே 25 லட்சமும், கோவாக்சின் 25 லட்சமும் கொள்முதல் செய்யப்பட உள்ளது.