ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் மையமாக தமிழ்நாடு உருவாகி வருவதாக பெருமிதத்துடன் கூறியுள்ள பிரதமர் மோடி, தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையை ஒரு போதும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காது என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு எனக் கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.
ஔவையாரின் பாடலை மேற்கோள்காட்டி நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மோடி, உணவுப் பொருட்கள் உற்பத்தி, நீர் மேலாண்மை ஆகியவற்றில் தமிழ்நாடு சாதனை படைத்து வருவதாக தெரிவித்தார்.
ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம் எனும் மகாகவி பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, நவீன ஆயுதங்களின் முக்கியத்துவத்தை பாரதி பாடல் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் வீரவணக்கம் செலுத்திய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட டாங்கி வடக்கில் இந்திய எல்லையை பாதுகாக்க உள்ளது எனக் கூறினார். ஏற்கனவே நாட்டிலேயே முன்னணி ஆட்டோ மொபைல் மையமாக திகழும் தமிழ்நாடு, விரைவில் பீரங்கி உற்பத்தி மையமாக உருவெடுக்கும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்தார். உலகில் சக்தி வாய்ந்த ராணுவமாக நமது படைகளை உருவாக்க வேண்டும் என்றும் ராணுவத்தை சக்தி வாய்ந்ததாக உருவாக்குவதில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது என்றும் குறிப்பிட்டார். எத்தகைய விலையை கொடுத்தாலும் இந்தியாவின் இறையாண்மையை கட்டிக்காக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
உலகிலேயே இந்தியாவில் தான் உட்கட்டமைப்பு மேம்பாடு வேகமெடுத்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி, அனைவருக்கும் இணைய வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மார்ச்சில் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில், ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைக்கும் தேவேந்திர குல வேளாளர் என்ற சட்டத் திருத்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இலங்கையில் தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை ஒரு போதும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காது என்றும் மோடி உறுதிப்பட தெரிவித்தார்.