உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்றியங்களில் இருந்து வெளியாட்கள் உடனடியாக வெளியேற உத்தரவு

9 மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெளியாட்கள் உடனடியாக வெளியேற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை முதல்கட்டமாகவும், வருகிற 9ஆம் தேதி 2ம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகின்றன.

இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3 ஆயிரத்து 346 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தற்போது 24 ஆயிரத்து 416 பதவிகளுக்கு 80 ஆயிரத்து 819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

9 மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெற உளளது.  இந்த ஒன்றியங்களில் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

இதையடுத்து, அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அனைவரும் தேர்தல் நடைபெறும் உள்ளாட்சி பகுதியில் இருந்து வெளியேற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வெளியேறாதவர்கள் மீது தேர்தல் விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 39 ஊராட்சி ஒன்றியங்கள், அதைச் சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள பகுதிகளில் நேற்று காலை 10 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை மதுக்கடைகளை திறக்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இன்று காலை 11 மணி முதல் வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், கை மை, அரக்கு உள்ளிட்ட பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு பாதுகாப்புப் பணியில் 17 ஆயிரத்து130 போலீசார், 3 ஆயிரத்து 405 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Exit mobile version