தமிழ்நாட்டில் சென்னை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், சென்னையில் பட்டினம்பாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், திருவான்மையூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலையில் தாழ்வானபகுதிகளில் மழை நீர் தேங்கியது.
இதேப்போல், சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் கனமழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான சத்திரக்குடி, கமுதக்குடி உள்ளிட்டப் பகுதிகளில் இடி, மின்னலுடன் இரண்டு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
மழையின் காரணமாக 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் நகர்ப்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் மழை வெளுத்து வாங்கியது. இதனால், நகரில் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதேபோல், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கிருஷ்ணன்கோவில், வன்னியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
இதனிடையே, திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழ்பெண்ணாத்தூர், செங்கம், மல்லவாடி, கலசபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.