இன்னும் ஒரு வார காலத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழைக்கு வாய்ப்பில்லை என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய வடகிழக்கு பருவழையின் காரணமாக, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது. அரபிக் கடலில் உருவான, ‘கியார்’ புயல் மற்றும் அதை தொடர்ந்து உருவான, ‘மஹா’ புயல் காரணமாகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஆனால், தற்போது குஜராத்தை நோக்கி நகரும் இந்த புயல்களால், தமிழகத்திற்கு இயல்பாக கிடைக்க வேண்டிய மழை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் ஒரு வார காலத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழைக்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, கணிக்கப்பட்டுள்ளது. இந்த தாழ்வு பகுதி, தமிழகம், புதுச்சேரிக்கு வராமல், வட கிழக்கு மாநிலங்களை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது என்பதால், தமிழகத்தில் திடீர் மழை மட்டுமே பெய்யும் எனவும், சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.