தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 36 மணிநேரத்தில் தாழ்வுப்பகுதி வலுப்பெற்று, இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டியுள்ள மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரும் என்றும், இது மேலும் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி புயல் சின்னம் நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 28 மற்றும் 29ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.