இரண்டு உயிர்களை காப்பாற்றிய தமிழக காவல் ஆய்வாளர் – குவியும் பாராட்டுக்கள்

சென்னையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் பிரசவ வலியால் தவித்த பென்ணுக்கு சரியான நேரத்தில் உதவி செய்ததாக காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை பலரும் பாராட்டி வருகின்றனர். பனிக்குடம் உடைந்த நிலையில் இருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

தலைமை செயலக காலனி காவல் நிலையத்தின் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளரான ராஜேஸ்வரியை பற்றி சென்னை காவல்துறையில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு சாதனைகள் பல படைத்த பெண்ணாகவே இன்றளவும் திகழ்கிறார்.

1999ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த ராஜேஸ்வரி வடசென்னை பகுதியின் ரவுடியிசத்தை கட்டுப்படுத்தினார். கடந்தாண்டு அரிவாள் வெட்டு வாங்கியும் அந்த ரவுடியை தனிஒருவனாக பிடித்தார். இதனால் முதலமைச்சரின் வீர தீர செயலுக்கான பதக்கத்தை பெற்றார்.

அதேசமயம் தமிழக காவல்துறை சார்பில் விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று ஏராளமான வெற்றிகளை குவித்துள்ளார். பல்வேறு நாடுகளுக்கும் சென்று தனது திறமையை நிரூபித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற காவல்துறையினரின் கருத்தரங்கில் சிறந்த காவல்துறை அதிகாரிக்கான விருதை பெற்றுள்ளார். மேலும் வீரசிவாஜி விருது, பொதுசேவைக்கான விருது பெற்றுள்ளார்.

பொதுவாக சட்டம்-ஒழுங்கு பிரிவில் பெரும்பாலும் ஆண்களே பணிபுரிவார்கள். ஆனால் ஒரு பெண்ணாக தனது துறைக்கு பெற்று தந்த நற்பெயர்கள் ஏராளம். கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது சென்னையின் முக்கிய பிரச்சனையான “ரூட்டு தல” பிரச்சனையில் மாணவர்களை கட்டுப்படுத்தி அந்த சமயத்தில் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார்.

இப்படியான மனிதர் தனிப்பட்ட வாழ்வில் தன்னை நம்பி வந்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் மனியநேயத்துடன் உதவி புரிந்துள்ளார்.

குறிப்பாக குற்றசெயல்களில் ஈடுபடுவோர் பலரை நல்வழிப்படுத்தியுள்ளார். தலைமைச்செயலகப் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு கால்பந்தாட்டத்திற்கான பொருட்கள், ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கு உதவிகள் என பலவற்றை செய்துள்ளார்.

குறிப்பாக 2015ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டப்போது வடசென்னை மக்களுக்கு உணவு உட்பட பல வசதிகளை செய்து கொடுத்து மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். கடந்த மே மாதம் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றி அவர் குழந்தைகளின் கல்விச்செலவுக்கு நிதி என அவரால் பயனடைந்தோர் ஆயிரம் பேர். தற்போது பிரசவ வலியால் தவித்த பென்ணுக்கு சரியான நேரத்தில் உதவி செய்து அனைவரின் பாரட்டிற்கும் உரியவராகியுள்ளார்.

 

Exit mobile version