தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை தொற்று அச்சுறுத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், மேலும் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா 2ம் அலை ஒருபக்கம் தலைவிரித்தாடி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை கருப்பு பூஞ்சை குறிவைத்து தாக்கி வருகிறது.
நாடு முழுவதும் சுமார் 12 ஆயிரம் பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்டோர் இதன் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 23 ஆம் தேதி வரை வேலூர் மாவட்டத்தில் ஒருவர் கூட கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படாத நிலையில், தற்போது 75 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
இதில், சேண்பாக்கத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், குணமடைந்து வீடு திரும்பிய பிறகு, கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரது இடது கண்ணை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றிய நிலையில், திடீரென உயிரிழந்தார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமதி என்பவருக்கு, கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், சரிவர சிகிச்சை அளிக்காததால் இரண்டு கண்களையும் அகற்றும் நிலை ஏற்பட்டது.
மேல் சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல பரிந்துரை கடிதம் வழங்காமல் தாமதித்ததால் இரண்டு கண்களும் பறிபோனதாக சுமதியின் கணவர் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.
சிகிச்சைக்காக பல லட்ச ரூபாய் செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சேர்ந்த ரமேஷ், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
மாம்பாக்கம் டாஸ்மாக் கடையில் மேலாளராக பணியாற்றி வந்த இவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பலியானார்.
கொரோனாவைப் போன்று கருப்பு பூஞ்சையும் பொதுமக்களை மிரட்டி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு விழித்துக்கொண்டு உயிர் பலியாவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேதனையுடன் வலியுறுத்தியுள்ளனர்.