நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்து, மாநிலங்களவையில் இருந்து தமிழ்நாடு எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் திருப்பிய அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து, மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கண்டன முழக்கம் எழுப்பினர்.
ஒரு மாநில சட்டமன்றம் அனுப்பக்கூடிய மசோதாவை, ஒரு ஆளுநர் எப்படி திருப்பி அனுப்ப முடியும்? என்றும், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றம் அனுப்பிய மசோதாவை திருப்பி அனுப்பி, ஆளுநர் அவமானப்படுத்துகிறார் என்றும் உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரத்தை கேள்வி நேரத்தில் பேசமுடியாது என மறுப்பு தெரிவித்த மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசுமாறு அறிவுறுத்தினார்.
ஆளுநரின் செயல் குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, மாநிலங்களவையில் இருந்து தமிழ்நாடு எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாட்டிற்கு ஆதரவாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.