9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு எவ்வளவு தெரியுமா?

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் 74 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில், மொத்தம் 14 ஆயிரத்து 662 பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்றது.

வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றினர்.

39 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், 78 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

755 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும், ஆயிரத்து 577 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்பட 11 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

 

மாலை 5 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களித்தனர்.

6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.

வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து, வாக்குப்பெட்டிகளுக்கு அலுவலர்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவில், 74.37 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 81.36 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக செங்கல்பட்டு,

வேலூர் மாவட்டங்களில் 67 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

ராணிபேட்டை மாவட்டத்தில் 81 சதவீதமும்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 சதவீதமும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 78 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72 சதவீதமும்,

தென்காசி மாவட்டத்தில் 74 சதவீதமும், நெல்லை மாவட்டத்தில் 69 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

 

Exit mobile version