தமிழக – கேரள மாநிலங்களுக்கு இடையேயான, நதிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என இரு மாநில முதலமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.
தமிழக – கேரள மாநிலங்களிடையே பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் நீர்ப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தை கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழகம் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச் செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் மற்றும் பொதுப்பணித்துறைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
கேரளா சார்பில் முதலமைச்சர் பினராயி விஜயன், நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி, மின்துறை அமைச்சர் மணி, வனத்துறை அமைச்சர் ராஜு, தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ், கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பரம்பிக்குளம் – ஆழியாறு நீர்ப்பாசனத் திட்டத்தில் நீர்ப்பகிர்வு, நீராறு – நல்லாறு, பாண்டியாறு – புன்னம்புழா நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவது, செண்பகவல்லி அணைக்கட்டைச் சீரமைப்பது, நெய்யாறு அணையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் பாசனத்துக்கு நீர் திறப்பது ஆகியவை குறித்து பேச்சுவார்த்தையில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு இருமாநில முதலமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தை மறு ஆய்வு செய்ய இரு மாநிலங்களிலும் தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என தெரிவித்தார்.