தமிழக – கேரள எல்லை பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்
கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வயநாட்டை அடுத்த அட்டமலா பகுதிக்கு துப்பாக்கியுடன் சென்ற மாவோயிஸ்ட்கள், பொதுமக்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டு, அவர்களிடம் பேசியுள்ளனர். மேலும் தமிழ், ஆங்கிலம், மலையாளத்தில் எழுதிய நோட்டீஸ்களை ஒட்டி சென்றுள்ளனர். இதில் நாடு காணி கொரில்லா படை ராணுவம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நக்சல் தடுப்பு படை ஏ.டி.எஸ்.பி மோகன் நவாஸ் தலைமையில் பில்லூர் அணை, குந்தா ரோடு, ஆனைகட்டி, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆனைக்கட்டி மற்றும் மாங்கரை சோதனைச் சாவடிகளில் அனைத்து வாகனங்களையும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே மாநிலத்திற்குள் அனுமதிக்கின்றனர்.