நாட்டிலேயே நல்லாட்சிக்காக அதிக விருதுகளை பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டிலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்ட மாநிலம் தமிழ்நாடுதான் என கூறினார். இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறினார்.
அதிமுக- பாஜக கூட்டணி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதாக கூறிய அமித்ஷா, மறுபுறம் திமுக- காங்கிரஸ் கூட்டணி மக்களை பற்றி கவலைப்படுவதே இல்லை என சாடினார்.
சோனியா காந்திக்கு தனது மகன் ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்ற கவலையும், ஸ்டாலினுக்கு தனது மகன் உதயநிதியை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற கவலையும் உள்ளதாக அமித்ஷா விமர்சித்தார்.
ஊழலை பற்றி திமுக- காங்கிரஸ் கூட்டணி பேசும் போது சிரிப்புதான் வருவதாக கூறிய அமித்ஷா, 2ஜி ஊழலை செய்தது திமுக – காங்கிரஸ் கூட்டணிதான் என தெரிவித்தார்.
மத்திய அரசுடன் மோதல் போக்குடன் செயல்படும் ஆட்சி வேண்டுமா? அல்லது மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்படும் ஆட்சி வேண்டுமா? என தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய மாநில அரசுகள் இணைந்து இரட்டை என்ஜின் போல் செயல்படும் ஆட்சி அமைய, அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.
அதிமுக- பாஜக கூட்டணி மக்களுக்காக, மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்கும் கூட்டணி என குறிப்பிட்ட அமித் ஷா, எம்.ஜி.ஆரின் மதிய உணவு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.