ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் மூன்று விருதுகளை பெற்று தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 21 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டில் சிக்கி தவிப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த போஷன் அபியான் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து அனைத்து மாநிலங்களும் இதனை முறையாக பின்பற்ற அறிவுரை வழங்கியது. இதில் 2018-19 ஆம் ஆண்டில் போஷன் அபியான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
போஷன் அபியான் திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் திறன் மேம்பாடு, ஒருங்கிணைப்பு, நன்னடத்தை, சமூக அணிதிரட்டுதல் போன்ற பணிகளை முறையாக பின்பற்றியதற்கு முதல் பரிசும் வழங்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மென்பொருளை சிறப்பாக கையாண்டதற்கு இரண்டாம் பரிசும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து பணிகளை சிறப்பாக கையாண்ட தமிழகத்திற்கு ஒட்டுமொத்த செயல்பட்டிற்கான முதல் பரிசையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மூன்று விருதுகளையும் வரும் 23ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள விழாவில் மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தில் சத்துணவு திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவது போல மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்தி மத்திய அரசின் அங்கீகாரத்தை பெற்றுள்ள தமிழக அரசு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Discussion about this post