முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே தமிழகம் 3வது இடத்தில் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றுவரும் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 98 நிறுவனங்கள் மூலம் இரண்டறை லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2023 தொலைநோக்கு திட்டம் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
மின் உற்பத்தி துறையில் சாதனை படைத்து வரும் தமிழகம், மின்மிகை மாநிலமாக உருவெடுத்துள்ளது என்றும் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பதில் தமிழகம் முனைப்பாக உள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
சட்டம் ஒழுங்கு, கல்வி, உட்கட்டமைப்பு, சுற்றுலா துறைகள் உள்ளிட்டவைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.