நீதியை நிலைநாட்டுவதில் இந்திய அளவில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக டாட்டா அறக்கட்டளை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
டாட்டா அறக்கட்டளை, சமூக நீதிக்கான மையம், காமன் காஸ், மனித உரிமைகளுக்கான காமன்வெல்த் அமைப்பு, தக்ஸ், திஸ் பிரயாஸ், சட்டக் கொள்கைக்கான விதி மையம் ஆகியன இணைந்து பல்வேறு மாநிலங்களின் காவல், சிறை, சட்ட உதவி நீதி வழங்கல் குறித்து ஐந்து ஆண்டுகளின் நிலவரம் குறித்து ஓர் ஆய்வு நடத்தியுள்ளன.
அந்த ஆய்வறிக்கையின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் நீதி வழங்கலில் 5 புள்ளி ஒன்பது இரண்டு மதிப்பெண்களைப் பெற்று மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 5 புள்ளி எட்டு ஐந்து மதிப்பெண்களைப் பெற்றுக் கேரளா இரண்டாமிடத்தில் உள்ளது. 5 புள்ளி ஏழு ஆறு மதிப்பெண்களைப் பெற்றுத் தமிழ்நாடு மூன்றாமிடத்தில் உள்ளது. காவல்துறை, நீதித்துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சிறைத்துறையில் பத்தாமிடத்திலும், இலவசச் சட்ட உதவிகள் வழங்குவதில் பன்னிரண்டாம் இடத்திலும் உள்ளது.
தேசிய அளவில் இலவசச் சட்ட உதவிகள் வழங்குவதற்காக ஒருவருக்கு ஓர் ஆண்டுக்கு 75 காசுகளே செலவிடப்படுவதாக அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குறைவான நிதி ஒதுக்கீட்டையும் எந்த மாநிலங்களும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தேசிய அளவில் ஒரு லட்சம் மக்களுக்கு 151 காவலர்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. தேசிய அளவில் நீதித்துறையில் 40 விழுக்காடு பணியிடங்களும், சிறைத்துறையில் 39 விழுக்காடு பணியிடங்களும் காவல்துறையில் 22 விழுக்காடு பணியிடங்களும் காலியாக உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.