"சட்டம் ஒழுங்கை பேணுவதில் தமிழகம் முதன்மை" – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்,குன்னூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கப்பச்சி வினோத், மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் செல்வராஜ், கூடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலன் மற்றும் உதகை தொகுதி பாஜக வேட்பாளர் போஜராஜன் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய துணை முதலமைச்சர், கடந்த நான்கரை ஆண்டுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணற்ற நலத்திட்டங்களை மக்களுக்காக வழங்கியுள்ளதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் துணை முதலமைச்சர் உறுதியளித்தார்.

ஆட்சியில்லாத போதே அராஜகத்தை கட்டவிழ்த்துவிடும் திமுக, ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா? என கேள்வி எழுப்பிய துணை முதலமைச்சர், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, எலுமிச்சம்பட்டியில், தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து துணை முதலமைச்சர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய துணை முதலமைச்சர், நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளின் துயர் போக்கும் வகையில், பயிர்க்கடனை தள்ளுபடி செய்து, அதிமுக அரசு நல்லாட்சி புரிந்துள்ளதாக தெரிவித்தார். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணுவதில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்வதாகவும் துணை முதலமைச்சர் கூறினார்.

அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவதாக கூறிய துணை முதலமைச்சர், இனம், மதம் பேதமின்றி அனைவரும் ஒரு தாய் மக்கள் போல் வாழ்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

கோவை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ச்சுணன், கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் P.R.G. அருண்குமார், கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் தாமோதரன், சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் K.R.ஜெயராம், சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் V.P.கந்தசாமி மற்றும் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோரை ஆதரித்தும் துணை முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார்.

 

Exit mobile version