தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மே 6ஆம் தேதி காலை 4 மணி முதல் 20ஆம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் இருக்கைகளில் 50 சதவிகித பயணிகள் மட்டுமே அமர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு மற்றும் காய்கறி கடைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள், நண்பகல்12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த கடைகளில் ஒரே சமயத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல் தடையின்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=egoWR7Eemvw
புதிய கட்டுப்பாடுகளின் படி, உணவகங்களில் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேநீர் கடைகள் நண்பகல்12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்களது அறைகளிலேயே உணவு வழங்க வேண்டுமென்றும், உணவுக்கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் ஏற்கனவே 25 நபர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மே 6ஆம் தேதி முதல், 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், அழகு நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரகப் பகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள அழகு நிலையங்களுக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இரவு நேர ஊரடங்கின் போது, அவசர மருத்துவத் தேவைகளுக்கு, விமானநிலையம், இரயில் நிலையம் செல்ல மட்டும், வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.
அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின்போது அனுமதிக்கப்படுகிறது.
மேலும், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம் எனவும்,
பெட்ரோல், டீசல் நிலையங்கள் செயல்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதொடர்பு, தகவல் தொழில் நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்களில் இரவு நேரப் பணி மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது.
இரவு நேர ஊரடங்கின்போதும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போதும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும் தொழிலாளர்கள் சென்று வர அனுமதிக்கப்படுவர்.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாட்களில்,
உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் Swiggy, Zomatto போன்ற நிறுவனங்கள் உணவு விநியோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்