சாலை பாதுகாப்பில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்குவது தமிழ்நாடு! – முதலமைச்சர் பெருமிதம்

அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கை காரணமாக, சாலை பாதுகாப்பில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சாலை பாதுகாப்பு திட்டங்கள் அர்ப்பணிப்பு விழா மற்றும் தமிழ்நாடு அரசின் சிறந்த சாலை பாதுகாப்பு நடைமுறைகள் விழிப்புணர்வு விழா சென்னையில் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார்.

கிழக்கு கடற்கரை சாலையில், அக்கரை முதல் மாமல்லபுரம் வரை, 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்பை, மத்திய அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் நாட்டிற்கு அர்ப்பணித்தனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில், 4 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சாலை பாதுகாப்பு ரோந்து வாகனங்கள் மற்றும் சாதனங்களை, மத்திய அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

5 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், காஞ்சிபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில், தீவிர சிகிச்சை மையத்திற்கான சாதனங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர்.

அதைத்தொடர்ந்து, சாலை பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு சிறந்து செயல்பட்டதற்கான முதன்மை மாநிலமாக, இரண்டு முறை விருது பெற்றுள்ளதற்கான குறும்படம் திரையிடப்பட்டது.

சாலை பாதுகாப்பில் சிறந்து விளங்கிய சேலம், தஞ்சை, திருவள்ளூர், முதலமைச்சரின் சாலை பாதுகாப்பு விருதை மத்திய அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் வழங்கினர். விருதை மாவட்ட ஆட்சியர்கள் பெற்றுக் கொண்டனர். சிறந்த மாநகரமாக திருநெல்வேலிக்கு விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாலை பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கை காரணமாக, விபத்து எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சாலை பாதுகாப்பில், இந்தியாவுக்கே தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்வதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

விபத்து மற்றும் அவசரகால சேவையை வழங்குவதற்காக, தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். சாலை என்பது பயணிப்பதற்காக மட்டும்தான், பந்தயத்திற்கானது அல்ல என தெரிவித்த முதலமைச்சர், இளைஞர்கள் தங்கள் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி குடும்பத்தையும் நாட்டையும் காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சாலை பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாகவும், இதனை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். விரைவில் தமிழ்நாடு ஜுரோ சதவீதம் விபத்து இல்லாத மாநிலமாக திகழும் எனவும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

Exit mobile version