ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை 4 ஆயிரத்து 321 கோடியை ஒரே தவணையாக வழங்க வேண்டும் என மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
டெல்லியில் நடந்த 42-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2017-18 ஆம் ஆண்டில் வழங்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. தீர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு தனது அறிக்கையை முடிவு செய்து, தமிழகத்திற்கு 4 ஆயிரத்து 321 கோடி வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
அந்த பரிந்துரையின்படி, தமிழகத்திற்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையினை ஒரே தவணையில் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கொரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை குறைக்க இந்த தொகை பேருதவியாக இருக்கும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி. வரிச் சட்டத்தின் அடித்தளமாக இருக்கும் பரஸ்பர நம்பிக்கையை பாதுகாத்து, உரிய நேரத்தில் மாநிலத்திற்கு இழப்பீடு வழங்குவதில், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைவாக அளித்திடவும், மத்திய அரசின் வழிகாட்டுதலை எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.