தமிழக அரசின் கொரோனா பரிசோதனை வழிகாட்டுதல்!

கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான வழிகாட்டுதல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாசக் கோளாறு பிரச்னை உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என்றும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் படி, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதேபோன்று, கொரோனா பரிசோதனை செய்யப்படும் நான்கு முறைகளின் வழிகாட்டுதல்களையும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. A, B, C மற்றும் D என நான்கு வகையாக பரிசோதனை முறைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, A வகை பரிசோதனை முறையில், தமிழகத்தில் பிறமாவட்டங்கள் செல்பவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே, கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறி இல்லை என்றாலும் கட்டாயம் 14 நாட்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

B வகை பரிசோதனை முறையில், வெளிமாநிலங்களுக்கு செல்லக் கூடியவர்களுக்கும், அதே போன்று வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கும், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்போது, நோய் தொற்றுக்கான அறிகுறி இருந்தால் கட்டாயம் அருகில் உள்ள மருத்துவமனையில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மாறாக, நோய் தொற்று உறுதியானால் நோய் தடுப்பு முகாமில் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

C வகை பரிசோதனை முறையில், நோய் அறிகுறி உள்ள அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள் இருந்தும் நோய் தொற்று இல்லை என்றால் முதல் 7 நாட்கள் அவர்களை கண்காணித்த பிறகு, 2வது முறையாக பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில், நோய் தொற்று உறுதியானால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

D வகை பரிசோதனை முறையில், உடல் உபாதை உடையவர்கள் மற்றும் அவசர சிகிச்சைக்கு வரக்கூடியவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதே போன்று, கர்ப்பிணிப் பெண்களுக்கும், 75 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version