பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல், தமிழகம் முழுவதும் இந்த தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக மக்களும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு இந்த பிளாஸ்டிக் தடைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு விதித்த இந்த தடையை நீக்க கோரி 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என தீர்ப்பளித்து உத்தரவிட்டது. மேலும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.