வெங்காயத்தை வரையறுக்கபட்ட அளவை விட அதிகளவு இருப்பு வைக்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வரத்து குறைந்ததால் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசின் சார்பில் வெங்காய விலை உயர்வை கட்டுபடுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லறை விற்பனையாளர்களும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக மொத்த விற்பனையாளர்களும் வெங்காயத்தை கையிருப்பு வைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் உள்ள வெங்காய மொத்த விற்பனை நிலையங்களிலிருந்து, தரமான வெங்காயம் கொள்முதம் செய்யப்பட்டு, தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலமாக தற்காலிக வெங்காய விலை உயர்வானது கட்டுக்குள் கொண்டுவரப்படும் என அமைச்சர்கள் காமராஜ் மற்றும் செல்லூர் ராஜு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.