ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 1994ஆம் ஆண்டு வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க அனுமதி கோரியபோது, கொள்கை அடிப்படையில் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் சுற்றுச்சூழல், காற்று, தண்ணீர் மாசு அடையும் வகையில் ஆலைக்குள் கழிவுகள் தேக்கி வைத்ததால், 2013ஆம் ஆண்டு விஷ வாயு கசிவு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

2018 மே 28 ம் தேதி நிரந்தரமாக ஆலையை மூட கொள்கை முடிவெடுத்து, ஆலை மூடப்பட்டதாகவும், இந்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து, தூத்துக்குடி பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்க உத்தரவிட்டதை சுட்டிக்காட்டிய தமிழக அரசு, ஆண்டுக்கு ஆயிரத்து 392 கோடி ரூபாய் லாபம் ஈட்டக்கூடிய நிறுவனத்திற்கு, இந்த தொகை மிகவும் குறைவு என தெரிவித்துள்ளது. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மொத்தமுள்ள 60 தொழிற்சாலைகளில், ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே அபாயகரமான விஷவயுவை வெளியேற்றக் கூடிய ஆலை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை, அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வாதத்தை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், ஜூன் 27ஆம் தேதி முதல், வழக்கின் பிரதான விசாரணை தொடங்கும் என கூறி, விசாரணையை தள்ளி வைத்தனர்.

Exit mobile version