கொரோனாவால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களை ஈடுசெய்யும் வகையில், 50 சதவீதம் வரையிலான செலவினங்களை குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கொரோனா தடுப்பு, மற்றும் நிவாரண பணிகளால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களால், தமிழக அரசின் 2020-21 ஆம் நிதியாண்டுக்கான செலவின மதிப்பீட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் நடப்பு நிதியாண்டில் அதிகாரிகளின் பயண செலவு, அலுவலகங்களுக்கு கொள்முதல் செய்யும் பொருட்கள் என பல்வேறு செலவினங்களை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது. அரசு விழாக்களில் வழங்கப்படும் சால்வை, பூங்கொத்து, நினைவு பரிசுகளை தவிர்க்கவேண்டும் எனவும், அதிகாரிகள் விமானத்தில் உயர் வகுப்பில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் அரசு உதவி அளிக்கும் திட்டங்களுக்கு மட்டும் உபகரணங்கள் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற துறைகள் உபரகணங்கள் கொள்முதல் செய்வதை ஓராண்டுக்கு ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு துறைகளில் 25 முதல் 50 சதவீதம் வரை செலவினங்களை குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.