சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழக அரசு சார்பில் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையமானது எளிதில் பயணிக்ககூடிய வகையில் ராஜா அண்ணாமலை புரம் பறக்கும் ரயில் நிலையத்திற்கு அருகிலும், மந்தைவெளி பேருந்து நிலையத்திற்கு இடையிலும், அடையாறு நதிக்கரையின் ஒரத்தில் பறவைகளின் சத்தத்தை மட்டும் கேட்கும் வகையில் காற்றோட்டமான ரம்மிய சூழலில் அமைந்துள்ளது.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற மத்திய அரசு பணிகளின் தேர்வுக்காக பயிற்சி அளிப்பதை முதன்மையான குறிக்கோளாக கொண்டு இலவசமாக செயல்பட்டு வருகிறது. பட்டியில் ஒதுக்கீடு அடிப்படையில் ஆண்டிற்கு மொத்தம் 245 முழுநேர பயிற்சி பெறுபவர்களும், காலை, மாலை என 100 பகுதிநேரமாக பயிற்சிபெறுபவர்களும் இதன் மூலம் பயனடைகின்றனர்.
இந்த பயிற்சி நிலையத்தில் ஒரு கல்வி முதல்வர், 2 பேராசிரியர்கள், 30க்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த வல்லுனர்கள் உள்ளனர். மேலும், குளிரூட்டப்பட்ட 4 வகுப்பறைகள், 250 பேர் அமரக்கூடிய அளவில் கருத்தரங்க அறை, 30,000 நூல்கள் அடங்கிய நூலகம், மாணவர்களிடையே ஏற்படும் குழப்பங்களை தீர்த்துக்கொள்ள wi-fi வசதியுடன் கூடிய 50 கணினிகள், 80 அறையுடன் கூடிய விடுதி, வல்லுனர்களால் முறைப்படுத்தப்பட்ட உணவு பட்டியல், மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட கழிவறைகள் என பல்வேறு சிறப்பம்சங்களை இம்மையம் கொண்டுள்ளது.
மேலும் பிரத்தியேகமாக கண் பார்வையற்ற மாணவர்களுக்கு தொடுதிறன் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் “Brail map மற்றும் Brail globe”களும், தொடுதிறன் புத்தகங்களும் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வையற்றவர்களுக்கும் எளிமையான முறையில் பயிற்சி பெறுகின்றனர்.
மேலும் இரண்டாம் கட்ட தேர்வில் வெற்றி பெற்று நேர்காணல் தேர்விற்காக டெல்லி செல்லும் மாணவர்களுக்கு பேருந்துவசதி, தங்கும் வசதி போன்றவைகளை ஏற்படுத்தி தருவதுடன் மூன்று மாதங்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதுவரை இந்த மையத்தில் பயிற்சி பெற்று வெற்றியடைந்த அதிகாரிகளை பட்டியலிட்டால் மிகப்பெரிய பட்டியலாகவே இருக்கும்.
பகுத்தறிவு பேசும் திமுக ஆட்சி காலத்தில் இந்த பயிற்சி நிலையமானது, அண்ணா நகரில் அதுவும் வாடகையில் Bc, sc என இரு பிரிவினருக்கு தனித்தனியான கட்டிடங்களை கொண்டு செயல்பட்டு வந்தது. அதன்பின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால் 2012-ல் ரூபாய் 10 கோடியே 14 லட்சம் செலவில் ஒன்றிணைத்து பிரத்தியேகமாக துவங்கப்பட்டது.
தற்போது இந்த பயிற்சி மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களை கருத்தில் கொண்டு தமிழக அரசானது 50 லட்ச ரூபாய் செலவில் மின்தூக்கி ஒன்றை தயார் செய்து வருகிறது.
இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள அகில இந்திய குடிமைப் பணி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி நிலையத்தில் இணைந்து மாணவர்கள் பயன்பெறுவதற்கான முழு விவரங்களுக்கு www.civil service coaching. com என்ற இணையதளத்தினை அனுகலாம்.