தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பந்தாடும் போக்கு தொடர் கதையாகி வருகிறது. நிலையான முடிவு எடுக்க முடியாமல் திமுக அரசு திணறுவதாக விமர்சனங்கள் எழுகின்றன
எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டித்தும் கூட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பந்தாடும் போக்கு தொடர்கதையாக உள்ளது. ஆனால் அதைக்கூட ஒழுங்காகச் செய்யாமல், துறை மாற்றம் செய்த அதிகாரிகளையே, ஒரு சில நாட்களில் மீண்டும் மாற்றம் செய்வது கேலிக்கூத்தாக மாறி வருகிறது. கடந்த மாதம் 25ம் தேதி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலராக இருந்த தீரஜ்குமார் உயர்க்கல்வித்துறைக்கும், வீட்டு வசதி வாரியத்தில் இருந்த கார்த்திகேயன் நெடுஞ்சாலைத்துறைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அடுத்த 2 நாட்களில் இருவரும் வேறு துறைக்கு மாற்றப்பட்டனர். அதேபோல், மகளிர் மேம்பாட்டு கழக செயல் இயக்குநராக இருந்த சந்திரகலா, 13ஆம் தேதி தென்காசி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் பதவியேற்பதற்குள் தென்காசி ஆட்சியராக சுந்தர்ராஜை நியமித்து, சந்திரகலா ராமநாதபுரம் ஆட்சியராக மாற்றப்பட்டார். சேலம் ஆட்சியராக இருந்த ராமன், தோட்டக்கலைத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் அருங்காட்சியகங்கள் இயக்குநராக மாற்றப்பட்டார்.
நிலையான முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் திமுக அரசின் நடவடிக்கைகளால், ஐஏஎஸ் அதிகாரிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.