சேலம் வாழப்பாடி அருகே சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விளையாட்டு வீரர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
சேலம் வாழப்பாடி அருகே சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
வாழப்பாடியை அடுத்த கட்டுவேப்பிலைப்பட்டியில், சேலம் கிரிக்கெட் பவுன்டேஷனால், 16 ஏக்கர் பரப்பளவில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மைதானத்தில் சர்வதேச தரத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன. இந்நிலையில், இன்று நடைபெற்ற விழாவில், கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, பெஞ்சமின், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு, கல்விக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் அளித்து வருவதாகவும், நேரு உள் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட மைதானங்களை தமிழக அரசு மேம்படுத்தியுள்ளது எனவும் கூறினார். தமிழகத்தைச் சேர்ந்த சர்வதேச வீரர்கள் 3 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறையில் கிராமப்புற இளைஞர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள் எனவும், எதிர்காலத்தில் கிராமப்புற இளைஞர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார்கள் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பிற மாவட்ட மாணவர்களும் சேலம் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடலாம் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், இந்திய அணியின் எதிர்கால வீரர்கள் கிராமங்களில் இருந்து தான் உருவாக போகிறார்கள் என்றார்.
முன்னதாக விழாவில் பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், சேலம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என கூறினார். விழாவின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மைதானத்தின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். ராகுல் டிராவிட் பந்துவீச, முதலமைச்சர் பேட்டிங் செய்தார்.