மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
ஓ.பி.சி.பிரிவினருக்கு 50சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கனவே மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகள் சார்பில் இதே கோரிக்கையுடன் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் சேர்த்து உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தினர். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதியதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழக அரசின் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.