தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று, கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 2011ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால் புத்துயிர் பெற்ற தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், 100 சேனல்களை 70 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் வழங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். பின்னர், 2017ல், டிஜிட்டல் ஒளிபரப்பை தாம் துவக்கி வைத்ததாகவும், அதற்காக இதுவரை, 36 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்து, சுமார் 35 லட்சத்து 12 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பொதுமக்கள் அதிகம் விரும்பும் சேனல்களை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கி வருவதாகவும், மக்களின் கோரிக்கையை ஏற்று, வேலூர் நீங்கலாக, வரும் 10ம் தேதி முதல், 130 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி கட்டணத்துடன் மாத சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.