தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக 2015ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தல் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்தச் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டது. அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில் மத்திய அரசு 2013ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இந்தப் புதிய சட்டத்தில் தமிழக அரசு மேலும் ஒரு சட்டப் பிரிவைச் சேர்த்துப் புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. இதை எதிர்த்து விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தை ரத்து செய்தனர். இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.