தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான வழக்கு விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அரசே ஏன் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறப்பது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான அதிமுக, தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க., தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆட்சேபனை இல்லை என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தன.

ஆக்சிஜன் உற்பத்தியைத் தவிர வேறு எந்த செயல்பாட்டிற்கும் அனுமதிக்க கூடாது எனவும், ஆலையை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு வழங்கவும் அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளதாக கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல எனவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்ததே தமிழ்நாடு அரசுதான் என்றும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு தற்காலிகமாக திறக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதுவரை ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்கவும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைமுன்பு பாதுகாப்புப் பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Exit mobile version