தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்றே தடுப்பூசி இல்லாத சூழல் ; பொதுமக்கள் ஏமாற்றம்

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில்,

பல்வேறு மாவட்டங்களில் இன்றே தடுப்பூசி இல்லாததால் ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

அரசின் சரியான திட்டமிடுதல் இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டில் இன்றே பல மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்கள் சீதாராம் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கடந்த ஞாயிற்று கிழமை தடுப்பூசி இல்லை என அறிவிக்கபட்ட நிலையில், நேற்று 500 பேருக்கு செலுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று தடுப்பூசி மையத்தில் மருந்து இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் பொதுமக்கள் விரக்தியடைந்தனர்.

முறையான திட்டமிடல் இல்லாததாலும், திடீரென வெளியிடப்படும் அறிப்பாலும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

 

உதகையில் 100 டோஸ் மட்டுமே இருந்த நிலையில் 290 பேருக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான டோக்கன் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பின்னர் தடுப்பூசி இல்லை அறிவிக்கப்பட்டதால் டோக்கன் பெற்று கால்கடுக்க காத்திருந்த பொதுமக்கள் எரிச்சலுடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

 

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 275 தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே இருந்த நிலையில், காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காக்க வைக்கப்பட்டனர்.

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படாததால், தடுப்பூசிக்காக வெயிலில் காத்திருந்த பொதுமக்கள் பெரும் வேதனையடைந்தனர்.

மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடுப்பூசி காலியான நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனை அருகேயுள்ள இளங்கோவன் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சிறப்பு முகாமில் மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனால் அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

இதனிடையே நாளை மறுநாள் முதல் முன்பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Exit mobile version