தமிழகம் மின்மிகை மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொண்டுவருவது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா என 5 மாநிலங்களில் ஏற்கனவே மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு 1761 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்தடம் உருவாக்கப்பட்டு விட்டது. தற்போது தமிழ்நாட்டில் கோபுரங்கள் அமைக்கும் பணி வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் துவங்கியுள்ளது. ஆனால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் போராடி வருகின்றனர்.
புதைவட தடமாக கொண்டுவருதென்றால் 400 கிலோ வாட்டுக்குள் இருந்தால் மட்டும் தான் சாத்தியம். அதுமட்டுமல்ல 500 மீட்டருக்கு ஒரு கேபிள்இணைப்பு செய்யப்பட வேண்டும், குறைந்தது 4 கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற விகிதத்தில் துணைமின்நிலையம் அமைத்து கண்காணிக்க வேண்டும். மேலும் பூமிக்கு அடியில் புதைக்கப்படும் போது பழுது ஏற்பட்டால் அதனை சரிசெய்ய 5 நாட்கள் ஆகும், பள்ளம் தோண்டி பழுதை சரிசெய்து மீண்டும் மண்நிரப்பி பள்ளத்தை மூட கூடுதல் செலவாகும். ஆனால் மின்கோபுரங்களாக இருந்தால் 2 மணிநேரத்தில் பழுதை சரிசெய்ய முடியும்.
உயர் அழுத்த மின்கோபுரம் ஒன்றை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்க சுமார் 7 கோடி ரூபாய் ஆகும். அதுவே புதைவட பாதையாக இருந்தால் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு 70 கோடி ரூபாய் வரை ஆகும். கிட்டத்தட்ட 10 மடங்கு கூடுதல் செலவாகும். புதைவடமாக மின்சாரத்தை கொண்டு செல்வது அதிகபட்சம் 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் மட்டும் தான் சாத்தியம். அதுவும் 380 கிலோ வாட் மின்சாரத்திற்குள் தான் அதனை கொண்டு போக முடியும். இதுபுரியாமல் 6000 மெகாவாட் மின்சாரத்தை உயர் அழுத்த கோபுரத்திற்கு பதிலாக புதைவடமாக கொண்டு போக வேண்டும் என்று கூறுவது முட்டாள்தனம்.
கேரளாவில் புதைவடமாக கொண்டு போவதாக சொல்கிறார்கள். சத்தீஸ்கரில் இருந்து கொண்டுவரப்படும் மின்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு 4000 மெகாவாட், கோவையில் இருந்து பிரிக்கப்படும் 2000 மெகாவாட் கேரளாவுக்கு அனுப்பப்பட உள்ளது. அதனை 320 கிலோ வாட்டாக மாற்றி கொண்டு செல்ல உள்ளனர். கொச்சின் நகரத்தில் மட்டும் தான் 29 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதைவடமாக கொண்டு செல்கின்றனர். அது 320 கிலோ வாட் மின்சாரம் என்பதை வசதியாக மறைத்து விடுகின்றனர் போராட்டக்காரர்கள். கேரளாவில் மட்டும் 183 உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதை இங்கு யாரும் பேசுவது இல்லை.
தமிழ்நாட்டின் மின்தேவை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசிடம் போராடி பெற்ற திட்டங்களுக்கு அரசியல் காரணங்களுக்காக முட்டுக்கட்டை போட முயல்வது சில கட்சிகளுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு பாதகமாக போய் முடியும். எனவே போராடும் முன் சிந்தித்து பார்க்க வேண்டிய காலம் இது.