தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், மின்சாரத்தால் இயங்கும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, மின்சார வாகனங்கள் தொடர்பான கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சார வாகனங்கள் குறித்த கொள்கையை முதலமைச்சர் வெளியிட அதனை, அமைச்சர்கள் எம்.சி.சம்பத் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள மின்சார வாகனக் கொள்கையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை 2030ஆம் ஆண்டு வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும் போது 100 சதவீத முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும். இந்த சலுகை 2022-ஆம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 100 சதவீத மின்சார வரி விலக்கு, நிறுவனங்கள் மூலம் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்குவதை உறுதி செய்யும் பொருட்டு தொழிலாளர் சேம நல நிதிக்கு ஈடான தொகை மானியமாக வழங்கப்படும் என மின்சார வாகன கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்ட பகுதிகளில் அரசு சார்பில், பிரத்யேகமாக மின்சார வாகன உற்பத்தி தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.