சட்டப்பேரவை தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் போட்டி!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் 3 ஆயிரத்து 998 பேர் போட்டியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 6 ஆயிரத்து 183 ஆண்கள், ஆயிரத்து 69 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 255 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். பரிசீலினையின் போது, 2 ஆயிரத்து 806 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4 ஆயிரத்து 449 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், 451 பேர் தங்களின் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். அதன்படி, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும், அருவக்குறிச்சி தொகுதியில் 40 பேரும் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக பவானிசாகர் மற்றும் வால்பாறை தொகுதிகளில் 6 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மேட்டூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த 73 பேரில், 57 பேரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. காங்கேயம் தொகுதியில் அதிகபட்சமாக 24 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், 234 தொகுதிகளில் 3 ஆயிரத்து 728 வேட்பாளர்கள் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version