தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் குறைவு! – முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாட்டில் வேலையின்மை விகிதம், டிசம்பரில் பூஜ்ஜியம் புள்ளி 5 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில், பல்வேறு துறைகளில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இதனால், தொழில் உற்பத்தி அதிகமுள்ள குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் வேலையின்மை குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் மாதத்தில், தமிழ்நாட்டில் வேலையின்மை விகிதம் 49 புள்ளி 8 சதவீதமாக இருந்தது. அதைத் தொடர்ந்து ஜூலையில் 8 புள்ளி 1 சதவீதமாகவும், செப்டம்பரில் 5 சதவீதமாகவும், அக்டோபரில் 2 புள்ளி 2 சதவீதமாகவும் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவில், நவம்பரில் ஒன்று புள்ளி ஒன்றாக இருந்த வேலையின்மை விகிதம், டிசம்பரில் பூஜ்ஜியம் புள்ளி 5 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சுமார் 41 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்நாட்டில் வேலையின்மை குறைந்தது தொடர்பான டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தியை ட்விட்டரில் பதிவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள் காட்டியுள்ளார். அம்மா அரசின் அடுக்கடுக்கான முயற்சிகள், அடுத்தடுத்து மேற்கொள்ளும் முதலீட்டு ஒப்பந்தங்களால் 5 ஆண்டுகளில் மிகக்குறைந்த வேலையின்மை விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 5ஆக உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version