நதிநீர் பிரச்சனை குறித்து தமிழக, கேரள முதல்வர்கள் இடையே வரும் 25ம் தேதி பேச்சுவார்த்தை

19 ஆண்டுகளுக்கு பிறகு நதிநீர் பிரச்னை குறித்து திருவனந்தபுரத்தில் தமிழக- கேரள முதல்வர்கள் வரும் 25ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

தமிழகம் மற்றும் கேரளா இடையே முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, நெய்யாறு உள்பட நதிநீர் பிரச்னைகள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இதுகுறித்து இரு மாநில முதல்வர்கள், நீர்ப்பாசன, பொதுப்பணித்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதில், இதுவரை எந்தவித சுமூக தீர்வும் ஏற்படவில்லை. இந்தநிலையில் நதிநீர் பிரச்னைகளில் தீர்வு ஏற்படுத்துவற்காக இரு மாநில முதல்வர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த கேரளாவுக்கு, தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை கேரள அரசு ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து இரு மாநில முதலமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை வரும் 25ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 அமைச்சர்கள், கேரள முதல்வர் பினராயி விஜயன், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, 2 மாநில நீர்ப்பாசன, பொதுப்பணித்துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

கடந்த 2000ம் ஆண்டில் முல்லைப்பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக தமிழக, கேரள முதல்வர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின்னர் 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இரு மாநில முதல்வர்களுக்கு இடையே நதிநீர் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version